Thursday, October 15, 2009

உற்சாகமே உயிர்

உற்சாகம் என்னும் ஊக்கி

வெற்றிகரமான மனிதர்களின் செயல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு முக்கிய விஷயம் புலப்படும். அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது ஒரு ஊக்கியாக இருக்கும்.

அந்த ஊக்கிதான் உற்சாகம். உற்சாகமே அவர்களது உயிர்.


கடவுள் மயம்

உற்சாகம் என்பதை ஆங்கிலத்தில் ENTHUSIASM என்கிறோம்.

ENTHUSIASM என்ற ஆங்கில வார்த்தை ENTHEOS என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது. இதன் பொருள் கடவுள் உன்னுடன் இருக்கிறார் அல்லது 'கடவுள் மயம்' என்பதாகும்.

ஆகவே 'உற்சாகத்துடன் இயங்குகிறார்கள் வெற்றியாளர்கள்' என்று சொல்லும்போது கடவுளே அவர்களுக்கு தைரியம், செயல்படும் உத்தி, ஞானம் இன்னும் அனைத்தையும் தருகிறார் என்று ஆகிறது.

சாதனையாளர்கள் அனைவரையும் இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையைத் தந்து அவர்களைக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்கிறது.

'உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள்.

வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.

நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்து, பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம். இல்லை, அதே முறையில் ஊக்கம் உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும் அமைத்துக் கொள்ளலாம்

நார்மன் வின்சென்ட் பீல் டிக்கன்ஸின் வெற்றி

பிரபல ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் தனது கதையில் வரும் நாயக, நாயகியர் இதர கதாபாத்திரங்கள் அனைவரும் தம்மைப் பிடித்து ஆட்டுவதாகவும் விரட்டுவதாகவும் கூறுவார். அவர்களைப் பேப்பரில் உரிய முறையில் ‘இறக்கி வைக்கும் வரை’ அந்தப் பாத்திரங்கள் அவரை விட மாட்டார்களாம். ஒருமுறை, ஒரு மாதம் வரை தன் அறையிலே அடைப்படுக் கிடந்து பிறகு வெளியே வந்தபோது கொலையாளி போலத் தெரிந்தாராம். அவரது பாத்திரங்கள் அவரை அப்படி ஆக்கிவிட்டிருந்தன!

உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள் உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது என்கிறார் எமர்ஸன்.

நெப்போலியன் உற்சாகம்

ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!

"பிரெஞ்சு வீரர்கள் ஆண்மையாளர்கள் அல்ல; அவர்கள் பறந்தோடிவிடுவர்" என்றனர் ஆஸ்திரியர்கள்.

இத்தாலிப் படையெடுப்பில் முதல் பதினைந்தே நாட்களில் ஆறு பெரும் வெற்றிகளை அடைந்து 1500 பேரை சிறைக் கைதிகளாக்கி மாபெரும் வெற்றி பெற்றான் அவன்.

நெப்போலியனைப் பார்த்த ஆஸ்திரிய ஜெனரல் வியந்து கூவினான். "இந்த இளம் தலைவனுக்குப் போர்க்கலை என்றால் என்னவென்றே தெரியாது" என்று.

ஆனாலும் அந்தக் குள்ளமான தலைவனைப் பின்பற்றி உற்சாகத்துடன் நடைபோட்ட வீரருக்குத் தோல்வியும் தெரியவில்லை; இருளடைந்த எதிர்காலமும் இல்லை!

மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியம்

மைக்கேல் ஏஞ்சலோ ஓவியம் வரைவதற்கு முன்னால் 12 வருட காலம் உடலியலைப் (ANATOMY) படித்தார். இதுவே அவரது ஓவியப் படைப்பை உயிருள்ளதாக்கியது. உடல் எலும்பு அமைப்பு, உடல் தசை, சதை, தோல் எனப் படிப்படியாக தனது படைப்புகளை உருவாக்க அவரது அடிப்படை உற்சாகமே காரணம். தனது வண்ணங்களைத் தாமே கலப்பது அவர் வழக்கம். வேலையாட்களையோ, தமது மாணாக்கர்களையோ வண்ணங்களைத் தொடக்கூட அவர் அனுமதிக்கவில்லை.

மொசார்ட்டிடம் கேட்ட கேள்வி

இசை அமைக்க விரும்பிய ஒரு 12 வயதுச் சிறுவன், மேதை மொசார்ட்டை அணுகி, "ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.

"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்தச் சிறுவன்.

"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப்போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்கவில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்" என்றார் மொசார்ட்.

இளமை உற்சாகம்

இளமையில் உற்சாகத் துள்ளல் அதிகம் இருக்கும். இளம் வயதிலேயே அலெக்ஸாண்டர் உலகை வென்றான். நெப்போலியன் 25-ம் வயதிலேயே இத்தாலியை வெற்றி கொண்டான். பைரன் 37 வயதிலேயே புகழேணியில் இறந்தார். பாரதியார் 39 வயதில் அருட்கவியைக் கொட்டி தேசத்தைத் தட்டி எழுப்பி புகழுடம்பு எய்தினார். 39 வருடங்கள் வாழ்ந்தே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாரதத்தை ஆன்மீக விழிப்படையச் செய்தார் சுவாமி விவேகானந்தர். ஆறு மதங்களை நிறுவி இந்து மதத்தை புனருத்தாரணம் செய்ய பாரதமெங்கும் கால்நடையாகவே சென்று நான்கு இடங்களில் மடங்களை நிறுவி உலகின் குருவாக - ஜகத் குருவாக 33 வயதிலேயே திகழ்ந்தார் ஜகத்குரு சங்கரர்.


முதுமையிலும் உற்சாகம்

இளமையில் உற்சாகம் இயல்பே என்றால், முதுமையிலும் விடாப்பிடியாக அதைப் பிடித்தால் எப்படி இருக்கும்? வயதான ஹோமர் படைத்த உலக மகா காவியம் தான் ஓடிஸி.

'கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை டாக்டர் ஜான்சன் எழுதும்போது அவருக்கு வயது 71.

ராபின்சன் குரூஸோ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை வெளியிடும்போது (DEFOE) டீபோவின் வயது 58. தனது "பிரின்சிபியா" என்ற நூலுக்கு விளக்கவுரை அளித்தார் நியூட்டன் தனது 83-ம் வயதில்.

ஆங்கில அகராதியைத் தொகுத்த வெப்ஸ்டர் ஐம்பது வயதிற்குப் பின்னர் 17 மொழிகளைக் கற்றார்.


பிராங்க் பெட்கரின் வெற்றி

பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர் ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும் கூட அவரை டீமிலிருந்து விலக்கி விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை என்ற ஒரு காரணத்தால்.

அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை" என்றார்.

"நான் என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே! கடையிலா வாங்க முடியும் அதை? என்னிடம் இல்லை என்றால் அது இல்லைதானே?" என்றார் பிராங்க்.

"அப்படி இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள். உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன் இருப்பதுபோல் நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்" என்றார் அவர்.

அப்படியே நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி, உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக உயர்ந்தார்.

உலகின் தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம் உற்சாகம் என்கிறார் பிராங்க் பெட்கர்.

"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.


இருப்பது போல

"இருப்பது போல" (AS IF) என்னும் இயற்கை விதி ஒன்று உண்டு.

உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம் இருப்பது போல நீங்கள் நடக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம் தாமாக உங்களை வந்தடையும்.

ஜலதோஷம் போல எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக் கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.

உற்சாகம் இருப்பது போலச் செயல்படுங்கள். தானே உற்சாகம் வந்து சேரும்.


தோரோ காட்டும் வழி

அமெரிக்கா தத்துவஞானி தோரோ காலை துயிலெழும் போது படுக்கையில் ஒரு 5 நிமிடம் இருந்தவாறே தன்னிடம் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பார். ஆரோக்கியமான உடல், விழிப்பான மனம், வேலையில் ஆர்வம், பிரகாசமான எதிர்காலம் தன்னை நம்பி உள்ள மக்கள்-இவற்றை எண்ணிப் பார்த்து இந்த "நல்ல செய்திகளை" முதலில் மனதில் போட்டு எழுந்திருப்பார். இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதால் வெளி உலகம் தரும் கெட்ட செய்திகள் அவரைப் பாதிக்காத அளவில் அவரது மனம் பண்பட்டது. ஆனால், நாளடைவில் நல்ல செய்திகள் மட்டுமே நிறைந்த நாட்களே அவருக்கு உருவாகத் தொடங்கின.


கெட்டவற்றைத் தூக்கி எறியுங்கள்

உற்சாகம் எப்போதும் தவழ ஒரு சிறிய உத்தி உண்டு. மனசாளரத்தைத் திறந்து கெட்ட எண்ணங்களை, கெட்ட செய்திகளை, கெட்டவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தூக்கி எறிவதுதான் அது.

சஞ்சலம் மிக்க சம்பவங்கள், தூக்கி எறிந்து பேசப்பட்ட வினாடிகள், துயரமான வார்த்தைகள், மனதை நோகச் செய்யும் செயல்கள், சிந்தனைகள் இவற்றால் நல்ல "மூடை" இழந்து எல்லாமே பாழாகிவிட்டது போல வரும் உணர்ச்சியை மாற்ற வல்லது இந்த உத்தி.

அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்தோ, படுத்தோ அன்று நடந்த ஒவ்வொரு உற்சாகமற்ற, வெறுப்பூட்டும் செயலை, சிந்தனையை "சம்பவத்தை மனதிலிருந்து எடுத்து, வெளியே போடுவது போல" பாவனையுடன் நினையுங்கள்.

அந்தச் செயல்களுக்கும் உங்களுக்கும் இனி சம்பந்தம் இல்லை. இப்போது வெற்றிடமாக இருக்கும் உங்கள் மனதில் உங்களுக்குப் பிடித்த வெற்றிகரமான, உற்சாகமாக செய்திகளை, சிந்தனைகளை நிரப்பி "நாளை நமதே", "நாளை வெற்றி நிச்சயம்" என்ற உணர்வுடன் உறங்கச் செல்லுங்கள்.

இந்த உத்தி தரும் அமைதியும், ஆனந்தமும் அனுபவித்தால் மட்டுமே புரியும்.

உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.

No comments:

Post a Comment