நம் அன்றாட வாழ்வில் செய்யும் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற வேண்டுமென்று நாம் விரும்புவது இயல்பு. அடுத்தடுத்து தடைகள், தோல்விகள் ஏற்படும் போது வெறுப்பு ஏற்படுவதும் இயல்பு. அது போன்று நிகழும்போதெல்லாம் நான் படித்த சில வெற்றியாளர்களின் தோல்விகளை எண்ணிப் பார்ப்பதுண்டு. அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கணிணி மூலம் 21ம் நூற்றாண்டில் உலக மக்களின் அன்றாட வாழ்வினையே மாற்றியமைத்த பெருமை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸைச் சேரும். 10 வருடங்களுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்பவர். 1970ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை.
*****
பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை தோல்வியடைந்தவர். இருப்பினும் மனம் தளராது முயன்று, வென்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியானார் என்று அறியும்போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளதல்லவா?
*****
ஐசக் நியூட்டன் அவர்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த கணித மேதைகளுள் ஒருவர். ஒலியியல் மற்றும் புவியீர்ப்பு விதிகள் அவரை தலை சிறந்த விஞ்ஞானியாகப் போற்ற காரணமானவை. அவர் பிறவியிலேயே அறிவாளி என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. அவர் பள்ளியில் படிக்கும்போது மிக மோசமாக படிக்கும் மாணவருள் ஒருவர். ஆசிரியர்கள் அவரைப் படிக்க வைக்க பல வகைகளில் முயன்றும் அவை தோல்வியிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
*****
லுட்விக் வான் பீதோவன் உலக வரலாற்றின் தலை சிறந்த இசை அறிஞர்களுள் ஒருவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவருடைய இசைக்கு மயங்காதவர்களே கிடையாது. ஆனால் சிறு வயதில் அவருக்கு பாட்டு கற்பித்த ஆசிரியர், 'என்றுமே உன்னால் ஒரு உருப்படியான இசையமைப்பாளராக முடியாது' என்றாராம். இசையமைக்க ஆரம்பிக்கு முன்பே கேட்கும் திறனை இழந்தவர் அவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அந்த நிலையிலும் மிக அற்புதமாக இசையளித்தார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
*****
அன்றாட வாழ்விற்குத் தேவையான பல கருவிகளை நமக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். சரித்திரம் போற்றும் விஞ்ஞானியான இவர் பெயரில் 1093 அமெரிக்க கண்டுபிடிப்பு உரிமம் உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது. ஆனால் சிறு வயதில் இவருக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் 'உன்னால் எதுவுமே கற்க முடியாது' என்று கூறியிருக்கிறார். அவர் முதல் முதலாக உருவாக்கியது மின் விளக்கு. அதை 9000 முறை பரிசோதனைகள் செய்து தோல்வி கண்ட பிறகே, கண்டுபிடிக்க முடிந்ததாம்!
*****
சில்லறைப் பொருட்களை விற்கும் வணிக நிறுவன வகையைச் சேர்ந்தது உல்வெர்த் நிறுவனம். ப்ரான்க் வின்பீல்ட் உல்வெர்த் தனது முதல் அங்காடியை 1878ஆம் தொடங்கினார். சில வருடங்களிலேயே உலகமெங்கும் கிளைகளைக் கொண்டதாக வளர்ந்தது அந்நிறுவனம். ஆனால் உல்வெர்த் 21 வயதில், இந்நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு அங்காடி ஒன்றில் பணிபுரிந்தார். அதன் உரிமையாளர் அவருக்கு வாடிக்கையாளர்களை சரிவர கவனித்துக்கொள்ளத் தெரியவில்லை என்று மட்டம் தட்டியிருக்கிறார்.
*****
மைக்கேல் ஜோர்டன் மிகச் சிறந்த கூடைப்பந்து வீரர். தனி ஒரு மனிதனாக நாட்டின் கூடைப்பந்துக் குழுவின் அமைப்பையே மாற்றியமைத்த பெருமை இவரைச் சேரும். அமைப்பில் சேர்வதற்கு முன்பு மற்றவர்களைப்போல ஒரு சாதாரண மனிதர் இவர். போதிய தகுதியில்லாத காரணத்தால் இவர் பள்ளியின் கூடைப்பந்து குழுவிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*****
அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் டிஸ்னி தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, பின்னணிக் குரல், கேலிச் சித்திர உயிரூட்டம் இப்படிப் பல கலைகளில் வல்லவர். உலகின் மிகச்சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவர். இன்றைக்கு வால்ட் டிஸ்னி என்ற கூட்டு ஸ்தாபனம் வருடத்திற்கு சராசரியாக 300 கோடி அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. டிஸ்னி தன்னுடைய சுயதொழிலை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் துவங்கினார். அவருடைய முதல் கேலிச் சித்திர தயாரிப்பால் கடனாளியானார் என்பதை அறிவீர்களா? அவருடைய முதல் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர், டிஸ்னிக்கு திரைப்பட தயாரிப்பைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று கேலி செய்திருக்கிறார்.